ரூ.2½ கோடி சொத்துக்கள் வரதட்சணை கேட்ட கணவர் கைது-இளம்பெண் புகாரில் சூரமங்கலம் போலீசார் நடவடிக்கை
ரூ.2½ கோடி அசையா சொத்துக்கள் வரதட்சணையாக கேட்ட கணவர் கைது செய்யப்பட்டார். இளம்பெண் புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சூரமங்கலம்:
ரூ.2½ கோடி அசையா சொத்துக்கள் வரதட்சணையாக கேட்ட கணவர் கைது செய்யப்பட்டார். இளம்பெண் புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பட்டதாரி பெண்
சேலம் நரசோதிபட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்த தொழில்அதிபர் ரவிகட்டி. இவருடைய மகள் சாய்சிந்து (வயது24). பட்டதாரியான இவருக்கும், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீகாந்த்கரே (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஸ்ரீகாந்த்கரே பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்தின் போது ரூ.33 லட்சம், ரூ.14 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ.6 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகும் சாய்சிந்துவின் பெற்றோர், தங்களால் முடிந்த அளவுக்கு பண உதவிகளை செய்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் சாய்சிந்துவின் கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
ரூ.2½ கோடி சொத்துக்கள்
இதற்கிடையே சாய்சிந்துவிடம், ரூ.2½ கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை வரதட்சணையாக கணவர் தரப்பினர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாய்சிந்துவை, ஸ்ரீகாந்த்கரே, அவருடைய தந்தை சைலம் கரே, தாய் பாக்கியம்மாள் ஆகியோர் அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சாய்சிந்து சார்பில் சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூ.2½ கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கூடுதல் வரதட்சணையாக கேட்டது தெரியவந்துள்ளது.
கணவர் கைது
இதையடுத்து சூரமங்கலம் போலீசார் சாய்சிந்துவின் கணவர் ஸ்ரீகாந்த்கரே, அவருடைய பெற்றோர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஸ்ரீகாந்த்கரேவை கைது செய்தனர். அவருடைய தாய், தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணிடம் ரூ.2½ கோடி அசையா சொத்துக்கள் கேட்டு வரதட்சணை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.