கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாவூர்சத்திரத்தில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜெகதீஷ் (வயது 24). இவர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து துரைமுருகன், விஜய், சுடலைமணி, பெனிஸ்டன் ஜோயல் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் துரைமுருகன் தனது கூட்டாளிகளுடன் இருந்த இடத்தை அறிந்து போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர்கள் போலீசாரை தாக்கினர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் துரைமுருகன் பலியானார். பின்னர் விஜய், சுடலை மணி, பெனிஸ்டன் ஜோயல் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சுடலைமணி (44) மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கலெக்டர் கோபாலசுந்தரராஜ், சுடலைமணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தார்.