வெள்ளோடு சரணாலயத்தில் சீசன் தொடங்கியது: வெளிநாட்டு பறவைகள் வருகை; கடல் போல் காட்சி அளிக்கும் ஏரி

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியதால் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. சரணாலய ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

Update: 2021-11-19 20:58 GMT
சென்னிமலை
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியதால் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. சரணாலய ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. 
மழை
ஈரோடு அருகே வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயம் 77.185 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வரும். பின்னர் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கே சென்று விடும். அதே போல் இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது போதுமான மழை பெய்துள்ளதால் சரணாலய ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
110 வகையான பறவைகள்
 ஐரோப்பா மற்றும் பனி பிரதேசங்களில் இருந்து பெலிகான், மஞ்சள் மூக்கு நாரை, பொரி வல்லாறு, நாமத்தலை வாத்து, மீன் கொத்தி போன்ற பறவைகளும், உள்நாட்டு பறவைகளான நீர் காகங்கள், பாம்புதாரா, அரிவாள் மூக்கன், புள்ளி அழகு கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகளும் வந்துள்ளன.
இந்த பறவைகள் அனைத்தும் அதிகாலை 5.30 மணிக்கு மேல் பெரும் இரைச்சலுடன் இரை தேட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு மாலை 6 மணியளவில் மீண்டும் சரணாலய ஏரிக்கு வந்து விடுகிறது. தற்போது சுமார் 110 வகையான பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளது.
பட்டாம் பூச்சி பூங்கா
பறவைகளுக்கு உணவாக மாதந்தோறும் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை சரணாலய ஏரியிலேயே வனத்துறையினர் விட்டு வருகின்றனர். சரணாலயத்தை காணவரும் குழந்தைகளை கவரும் வகையில் "பட்டாம்பூச்சி பூங்கா" ஒன்றும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த பூங்காவில் நீல்பொறி கருஞ்சி, பழுமுனை ஒன்சி, கரும்புகர் குருசி, கருமுனை ஒன்சி உள்ளிட்ட 8 வகையான இனங்களை கொண்ட பட்டாம் பூச்சிகள் உள்ளன. பட்டாம்பூச்சிகள் நுகர்வதற்காக 60-க்கும் மேற்பட்ட வகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ரூ.5 கோடி
சரணாலய ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நிழற்குடைகள், அமரும் வகையில் இருக்கைகள், நடைபாதை கற்கள், ஊஞ்சல்கள், குடிப்பதற்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் என பல்வேறு வசதிகள் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரணாயலத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கேண்டீன் வசதியும் விரைவில் செய்யப்பட உள்ளது. சரணாலய ஏரியில் யாரும் மீன்களை பிடிக்காமல் இருக்கும் வகையில் வனத்துறை ஊழியர்கள் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்