மணலை மலை போல குவித்து வழிபட்ட பக்தர்கள்

மேலூர் அருகே மணலை மலை போல குவித்து வழிபடும் பாரம்பரிய கார்த்திகை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Update: 2021-11-19 20:51 GMT
மேலூர்
மேலூர் அருகே மணலை மலை போல குவித்து வழிபடும் பாரம்பரிய கார்த்திகை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கார்த்திகை திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நேற்று நடைபெற்ற கார்த்திகை திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காணோர் வந்திருந்தனர். 
இங்கு உருவ வழிபாடு கிடையாது. கோவில் சுற்றி கட்டிடங்கள் இன்றி திறந்த வெளியில் கோவில் அமைந்துள்ளது. பெருமாள் அவதரித்த படிக்கட்டுகளில் மாலை சாத்தி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 
மணல் மலை
இந்த கோவில் முன்பாக சேங்கை எனப்படும் தீர்த்தகுளம் உள்ளது. சாமி கும்பிடுவதற்கு முன்பாக பக்தர்கள் இந்த குளத்தில் தீர்த்தமாடிவிட்டு அந்த சேங்கை குளத்து மணலை கையினால் அள்ளி அதனுடன் உப்பு பொட்டலங்களையும் எடுத்து கோவில் அருகே குளத்து கரையில் இருக்கும் மணல் மலை மீது போடுவார்கள். இவ்வாறாக மூன்று முறை செய்தால் நினைத்தது நிறைவேறும், மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இதன்படி இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்ட மணல் தற்போது 50 அடி உயரத்துக்கும் மேலாக பெரிய மணல் மலையாகவே அமைந்து விட்டது. 
மணலால் அமைந்துள்ள இந்த மலை புயல், மழை பெய்தாலும், வெள்ளம் வந்த போதிலும் பாதிப்படையாமல் உள்ளது. திருவிழாவையொட்டி கோவில் முழுவதுமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாட்டுக்கு பின் பாரம்பரிய வழக்கப்படி கிராமத்தார்களுக்கு மரியாதைகள் செய்யப்பட்டன. பின்னர் பெருமாள் மலை மீது கொண்டைக்கல் என்னுமிடத்தில் மாலை 5 மணி அளவில் ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் பெருமாள் மலையை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கார்த்திகை விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.
பொங்கல் கரும்பு விற்பனை தொடக்கம்
மேலூர் பகுதியில் விவசாயிகள் பயிரிடும் பொங்கல் கரும்புகளை முதலில் இந்த கோவிலில் வந்து விற்பனை செய்வது வழக்கம்.. பக்தர்கள் இந்த கரும்புகளை கோவில் பிரசாதமாக போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கமாகும்.நேற்று கரும்பு விற்பனை அதிகமாக இருந்தது. ஒரு கரும்பு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. 
இதேபோன்று மேலூர் அருகே மேலவளவில் உள்ள கருப்பு கோவில், புலிமலைபட்டியில் உள்ள முருகன் கோவில், இடையபட்டியில் மலைமீதுள்ள முருகன் கோவில் உள்பட மேலூர் பகுதியில் நேற்று பல்வேறு கிராமங்களில் கார்த்திகை திருவிழா நடந்தது.

மேலும் செய்திகள்