தொடர் கனமழை எதிரொலி: கர்நாடகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 20:42 GMT
பெங்களூரு: தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் தேங்கி நின்றது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் கர்நாடகத்திலும் எதிரொலித்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நாள் முழுவதும் மழை பெய்ந்தது. ஏறத்தாழ 24 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இது லேசான மழை என்பதால் நகரில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

எலகங்காவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர சிரமப்பட்டனர். அதே போல் நெலமங்களாவிலும் சில அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்று பாதிப்புகளை ஏற்படுத்தியது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று முன்தினம் பெங்களூருவில் 7.3 சென்டி மீட்டர் மழையும், சர்வதேச விமான நிலைய பகுதியில் 9 சென்டி மீட்டரும், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் 8.5 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அதே நேரத்தில் பெங்களூருவில் நேற்று மழை பெய்யவில்லை. சில நேரங்களில் மழை துளிகள் விழுந்தன. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. துமகூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், பல்லாரி, சித்ரதுர்கா, ஹாசன், சித்ரதுர்கா, ராமநகர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

துமகூரு மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்ட நிலையில் இருந்து ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் தொடர் கனமழை காரணமாக பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், கோலார், மைசூரு, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, துமகூரு, தார்வார், ராமநகர், ஹாவேரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களுக்கு மழை பெய்யும்

துமகூரு மாவட்டம் மல்லப்பனஹள்ளியில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் குறுக்கே உள்ள சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றபோது, அந்த வண்டியை வெள்ளம் இழுத்து சென்றது. அதில் சென்ற 2 பேர் அதில் இருந்து குதித்து தப்பி உயிர்பிழைத்தனர். ஹாசன் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல், ராகி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு கர்நாடகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்றும், வட கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் கனமழையும், தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களான பெங்களூரு புறநகர், பெங்களூரு நகரம், சித்ரதுர்கா, சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாசன், குடகு, ராமநகர், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

கர்நாடகத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் கனமழை பெய்த ஊர்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-
கோலார் மாவட்டம் மாலூரில் அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கோலார், துமகூருவில் தலா 150 மில்லி மீட்டரும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி, சிந்தாமணி, சீனிவாசபுராவில் தலா 120 மில்லி மீட்டரும், முல்பாகலில் 110 மில்லி மீட்டரும், ஒசக்கோட்டையில் 100 மில்லி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

9 ஆயிரம் கோழிகள் செத்தன

துமகூருவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஒரு கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வளர்க்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் கோழிகள் தண்ணீரில் மூழ்கி செத்தன. அதே போல் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியிலும் ஒரு பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததை அடுத்து அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார் 4 ஆயிரம் கோழிகள் செத்துவிட்டன. ஆகமொத்தம் மழைநீர் புகுந்து 9 ஆயிரம் கோழிகள் செத்தன. இதனால் அவற்றை வளர்த்து வந்த உரிமையாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்