பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் மெர்சிகிளாரா, பொருளாளர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முழு வீரியத்தன்மையுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்திடும் வகையில், மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதையும், இலக்கு நிர்ணயிப்பதையும் அரசு கைவிட வேண்டும். தாய், சேய் நலப்பணி பாதிக்காத வகையில் செவிலியர்களுக்கு சனிக்கிழமையில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணி ஒதுக்க வேண்டும். விடுபட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு கொரோனா ஊக்கக்தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கைகள் தொடர்பான மனுவினை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.