திருவண்ணாமலை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-11-19 19:41 GMT
திருவண்ணாமலை, 


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெற்றதால் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிககனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்தது.

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று பகல் 12 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறியது.
தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதுதவிர அனைத்து ஆறுகளிலும் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

முக்கிய ஆறுகளான தென்பெண்ணை, செய்யாறு, கமண்டலநாகநதிகளில் இருகரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து செல்லும் மழைவெள்ளத்தை மக்கள் வந்து வியப்புடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.

புதிதாக நீர்வீழ்ச்சிகள்

பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். விபரீதம் அறியாத இளைஞர்கள் ஆற்றில் குளித்தனர். வலைகளை வீசி மீன்களை பிடித்ததையும் காணமுடிந்தது.
செங்கம் சாலையில் உள்ள அக்னிதீர்த்த குளம் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை நகரில் உள்ள தீப மலையில் ஆங்காங்கே சிறு, சிறு நீர்வீழ்ச்சிகள் புதிதாக ஏற்பட்டது. அதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

நல்லவன்பாளையம், வேங்கிக்கால் ஜெய்பீம்நகர், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குறிஞ்சிநகர், அவலூர்பேட்டை சாலையில் உள்ள அய்யப்பன்நகர், நொச்சிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவித்தனர். பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

குறிப்பாக வேங்கிக்கால் ஏரி நிரம்பி வேலூர்- போளூர் சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்தில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலைதடுமாறினர். சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்தனர்.

மேலும் செய்திகள்