சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்்த்திகை விழாவையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கபிஸ்தலம்:
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்்த்திகை விழாவையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமிநாதசாமி கோவில்
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் திகழ்கிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் திருக்கார்த்திகை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கார்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. சுவாமிநாதசாமிக்கு தங்க கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீர்த்தவாரி
தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையும், வெள்ளிமயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியசாமி உள்பிரகார புறப்பாடு நடந்தது. பின்னர் தீபக்காட்சியும், இரவு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனா.
விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை கோவில் வளாகத்தில் உள்ள வஷ்ரதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.
சிறப்பு பஸ்கள்
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீசார் செய்திருந்தனர். திருக்கார்த்திகையையொட்டி கும்பகோணத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.