3 வேளாண் சட்டங்கள் வாபஸ்; போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-11-19 19:10 GMT
குளித்தலை, 
வேளாண் சட்டங்கள் வாபஸ்
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து குளித்தலை காந்தி சிலை முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்தநிலையில் 3  வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது குறித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
குளித்தலை விவசாயி மகாலிங்கம்:- விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக வேளாண் சட்டங்களை இயற்றியது. இதனை திரும்ப பெறக்கோரி கடந்த ஓராண்டாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் இறந்து உள்ளனர். மேலும், விவசாயிகளுடன் பெயரளவிலான பேச்சுவார்த்தையே மத்திய அரசு நடத்தியது.
இழப்பீடு வழங்க வேண்டும்
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அறிவிப்பாக இல்லாமல் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் சட்டமாக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் முழுமையான நம்பிக்கை ஏற்படும்.
மேலும் இப்போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இடுபொருட்களின் விலை உயர்வு
புகளூர் சர்க்கரை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கதிர்வேல்:- 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இருப்பினும் இது காலம் கடந்த நடவடிக்கையாகும். வேளாண் விற்பனை பொருட்களின் விலை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தார். ஆனால் விவசாய இடுபொருட்களின் விலை மட்டுமே இருமடங்காக உயர்ந்தது. 
விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கியபோதே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று இருந்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் போராட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
உலகமே திரும்பி பார்க்க வைத்த போராட்டம்
சம்யுக்தா கிசான் மோர்ச்சா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜசேகர்:- தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொள்ள ஓராண்டு காலமும், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர் தியாகமும் தேவை என்றால் ஜனநாயகம் எதற்கு என்ற கேள்வி மேலோங்கி உள்ளது. மக்கள் போராட்டம் என்றும் தோற்றதில்லை. உலகமே திரும்பி பார்க்க வைத்த போராட்டம். உலகிற்கு உணர்த்திய மக்கள் போராட்டம் இந்திய விவசாயிகளின் போராட்டம். என்றும், எப்போதும் வென்றே தீரும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
செஸ் வரி நீக்கம்
அமராவதி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வெங்கட்ராமன்:- விவசாயிகளின் போராட்டத்தில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் கூட, இறுதியில் ஒரு நீண்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தை திரும்ப பெறும் நிலையில், வேளாண் விளை பொருட்களுக்கான செஸ் வரி நாடு முழுவதும் நீக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டாலும், சட்ட ஷரத்துகளில் இருந்த வேளாண் விளை பொருட்களுக்கான செஸ் வரி நீக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்