5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க பொதுமக்கள் சம்மதம்
தரகம்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தானமாக தர பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
கரூர்,
அரசு கலை, அறிவியல் கல்லூரி
கடவூர் தாலுகா, தரகம்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி தரகம்பட்டியில் இருபாலர் பயிலும் கல்லூரி 2020-2021-ம் கல்வியாண்டில் இருந்து தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரிக்கான கட்டிடம் கட்டுவதற்கு இடத்தினை தரகம்பட்டியில் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்து தரகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 16-ந்தேதி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 ஏக்கம் நிலம் தானம்
இந்தநிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், தரகம்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க தரகம்பட்டி கிராம மக்கள் சார்பாக 5 ஏக்கர் நிலம் அரசிற்கு தானமாக வழங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, தான பத்திரம் பதிவு செய்யப்பட்டவுடன், கல்லூரிக்கான கட்டிடம் கட்ட முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்படும் என முடிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கண்ணன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு)பாலுசாமி, கடவூர் தாசில்தார் ராஜாமணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.