குப்பை கிடங்கை மாற்றக்கோரி போராட்டம்
குப்பை கிடங்கை மாற்றக்கோரி போராட்டம்
கீரமங்கலம்:
கீரமங்கலம் பேரூராட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை பிரபலமாக இருந்த வாரச் சந்தை திடலில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை கொட்டி வைத்துள்ளனர். குடியிருப்பு மற்றும் கடைகள், அங்காடி, வருவாய்த்துறை அலுவலகங்கள் உள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கொட்டி குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் பாம்புகளும், நாய்களும் அதிலிருந்து வெளியேறி பொதுமக்களை கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் குப்பை கிடங்கை மாற்றக் கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் வடிவேல், நகரச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலுக்கு தயாராகி நின்றனர். அப்போது அங்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சந்தை திடலில் குப்பை கொட்டுவதை நிறுத்துவதாக கூறினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று போராட்டக் குழுவினர் உறுதியாக கூறிவிட்டு சாலை மறியல் போராட்டத்தை காத்திருப்பு போராட்டமாக அறிவித்து நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து மதியம் இனிமேல் சந்தைப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதில்லை என்றும் தற்காலிகமாக குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டிக் கொள்வது. 2 மாதத்தில் நிரந்தரமாக குப்பைக்கிடங்கு அமைத்துக் கொள்வது என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் எழுதிக் கொடுத்த பிறகு காத்திருப்பு போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.