கம்பத்தில் மழைநீர் ஒழுகும் சஷ்டி மண்டபத்தை சீரமைக்க கோரிக்கை

கம்பம் கம்பராயப்பெருமாள் கோவிலில் மழைநீர் ஒழுகும் சஷ்டி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-19 16:37 GMT
கம்பம்:
கம்பத்தில் பிரசித்திபெற்ற கம்பராயப்பெருமாள் கோவில் உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் வளாகத்தில் தென்புறம் கம்பராயப்பெருமாள் சன்னதியும், வடபுறம் காசி விசுவநாதர் சன்னதியும் உள்ளது. சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் திகழ்கிறது. இங்கு பக்தர்களின் வசதிக்காகவும், சாமி ஊர்வலம் மற்றும் உலா வாகனங்கள் பாதுகாப்பிற்காகவும் சஷ்டி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணி செய்யாததால் சஷ்டி மண்டபம் சேதமடைந்து வருகிறது. குறிப்பாக மண்டபத்தின் மேற்பரப்பு தளம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண்டபத்தின் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. 
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மண்டபத்தை சீரமைக்க கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சஷ்டி மண்டபத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கோவில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் கூறுகையில், சஷ்டி மண்டபம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்