திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் கோவிலில் உள்ள அனைத்து சுவாமி சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.
சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளினார். இரவு 7.05 மணிக்கு கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஏரல்
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் ஏற்றினார். கோவில் சுற்றுப்பிரகாரத்தில் விளக்குகளால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கோவில் முன்பு பல வகை மூலிகைச் செடிகளின் குச்சிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு அதன்பின்பு சிறப்பு பூஜை நடந்தது