‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-19 09:12 GMT
மின்வாரியம் உடனடி நடவடிக்கை

சென்னை வில்லிவாக்கம் அம்பேத்கார் தெருவில் பள்ளிக்கூடம் அருகே மின்கம்பத்தின் வயர்களை மரக்கிளைகள் உரசுவது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று கொட்டும் மழைக்கு இடையிலும், அந்த மரக்கிளையை அகற்றி உள்ளனர். இதற்காக மின்வாரியத்துக்கும், ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியையும், மனதார பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

சேதமான மின்கம்பம் மாற்றம்

திருவேற்காடு அன்பு நகர் கல்பனா பள்ளி தெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்திருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவில் குளம் அருகே குப்பைக்கூளம்



சென்னை வில்லிவாக்கம் பாலி அம்மன் கோவில் குளம் அருகே உள்ள பகுதியை குப்பைகள் சேகரிக்கும் இடமாக மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மனவேதனையை அளிக்கிறது. மேலும் இந்த குப்பை கழிவுகளை தெருநாய்களும், கால்நடைகளும் தூர்வாருவதால் இப்பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே இப்பகுதியை சுத்தம் செய்து, குப்பைகள் சேகரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

-ஜெயின் பிளாட்ஸ் குடியிருப்பு வாசிகள்.

டெங்கு நோய் பரவும் அபாயம்

திரிசூலம் ஜெ.ஜெ நகரில் இருந்து வரும் கழிவுநீர் ஜமின் பல்லாவரம் சுபம் நகர் சித்தி வினாயகர் சாலை வழியாக காலி மனைகளில் தேங்கி குளம் போல் நிற்கின்றது. இதனால் இங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

-சுபம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம்.

முறையற்ற மின் இணைப்பால் ஆபத்து


சென்னை புதுப்பேட்டை நாராயண நாயக்கன் நகர் 10-வது தெருவில் உள்ள சில வீடுகளில் முறையாக மின் இணைப்பு பெறப்படவில்லை. பில்லரில் இருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்த வயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷேக்.

சமூக விரோதிகள் கூடாரமான பாழடைந்த கழிப்பிடம்

சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர். நகர் முதல் தெருவின் அருகே குட்சேஷ்ட் ஓரம் பொது கழிப்பிடம் பாழடைந்து பயன்பாடின்றி உள்ளது. தற்போது இந்த இடம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது. இங்கு சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே பயன் இல்லாத இந்த கழிப்பிடத்தை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

-எம்.ஜி.ஆர். நகர் மக்கள்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

சென்னை வில்லிவாக்கம் சிவன் கோவில் மேற்கு மாட வீதி மற்றும் எம்.டி. எச் ரோடு சந்திப்பில் நிறைய வாகனங்கள் திரும்புவதால் அடிக்கடி விபத்துகளுக்கு வாய்ப்பாக அமைகிறது. இந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தந்தால் விபத்துகளை தடுக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகானந்தம், வில்லிவாக்கம்.

எரியாத தெருவிளக்குகள்

காஞ்சீபுரம் மாவட்டம் மலையம்பாக்கம் ஊராட்சி அம்பேத்கார் தெருவில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் வெறும் காட்சி பொருளாக இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் நிலைமை உள்ளது.

-பூ.ஆதிகேசவன், மலையம்பாக்கம் ஊராட்சி.

வழிந்தோடும் கழிவுநீரால் அவதி



திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவள்ளூர் குடியிருப்பில் மழைவெள்ள நீர் வடிந்து இயல்புநிலை திரும்பி வரும் வேளையில் கழிவுநீர் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கடந்த 4 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-மு.சரண், திருவள்ளூர் குடியிருப்பு.

கொசுக்கள் படையெடுப்பு

சென்னை கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் 4-வது தெருவில் உள்ள காலிமனையில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வடியாமல் இருப்பதால் கழிவுநீர் போன்று துர்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி படையெடுக்கின்றன. இரவு-பகல் என்று பாராமல் கொசுக்கள் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளோம்.

-பகுதி மக்கள்.

நடைபயிற்சிக்கு இடையூறு

சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி 46-வது வட்டம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பூங்காவின் சுற்றுச்சுவர் ஒரு பகுதி இடிந்து நடைபயிற்சி பாதையில் விழுந்துள்ளது. இதனால் நடைபயிற்சி செய்வோர்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த பூங்கா பராமரிப்பு இன்றி பாழ்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.கருணாகரன், சத்தியமூர்த்தி நகர்.

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு



காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி - சுங்குவார்சத்திரம் சாலை மாடுகள் சரணாலயம் போன்று மாறி வருகிறது. இது எங்க ஏரியா... என்பது போன்று சாலையின் நடுவே மாடுகள் கூட்டமாக அமர்ந்து ஒய்யாரமாக ஓய்வெடுகின்றன. கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ப.கவி மதன், சமூக ஆர்வலர்.

மேலும் செய்திகள்