வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-19 08:48 GMT
ரூ.35 ஆயிரம் லஞ்சம்

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர், குன்றத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ்க்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறுவுறுத்தி அனுப்பினார்கள்.

பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலம் அருகே பேரூராட்சி கிளார்க் செல்வராஜ், அந்த லஞ்ச பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செங்கல்பட்டு அடுத்த கருங்குழியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்