திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் இன்றி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் இன்றி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு கிரீடம், சேவல் கொடி சாற்றப்பட்டது. மேலும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சாற்றி பட்டாபிஷேகம் நடந்தது. இது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மலையில் மகாதீபம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக கோவிலுக்குள் தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து பதினாறு கால் மண்டபம் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதையொட்டி மலை கோவில் மற்றும் நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது.