ஆத்தூரில் தங்கும் விடுதியில் பெண் கழுத்தை நெரித்துக்கொலை-வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆத்தூரில் தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-11-18 21:20 GMT
ஆத்தூர்:
ஆத்தூரில் தங்கும் விடுதியில் பெண்ணை கழுத்தை நெரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தங்கும் விடுதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் உழவர்சந்தை அருகே ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம்  இரவு 9.30 மணி அளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் வந்தார்.
அவர்கள் தாங்கள் வெளியூர் என்றும், இரவு நேரம் ஆகி விட்டதாலும், மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதாலும் தங்குவதற்கு அறை கேட்டனர். இதைத்தொடர்ந்து தங்கும் விடுதி மேலாளர் அருள் (வயது 32) என்பவர் அவர்களுக்கு ஒரு அறையை கொடுத்தார். அந்த அறைக்கு சென்ற அவர்கள் கதவை தாழிட்டுக்கொண்டனர்.
பிணமாக கிடந்தார்
பின்னர் இரவு 11.30 மணிக்கு பெண்ணுடன் வந்த வாலிபர் மட்டும் வெளியே வந்தார். அவர் விடுதியின் வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் சாப்பாடு வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அந்த வாலிபர் தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை. 
இதனிடையே நேற்று காலை 11 மணி ஆகியும் அந்த பெண் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வர வில்லை. மேலும் அந்த வாலிபரும்  திரும்பாததால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், அந்த அறையை திறந்து பார்த்தனர். அங்கு அந்த பெண் இறந்து பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கழுத்தை நெரித்துக்கொலை
இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அந்த பெண் புடவையால் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்த பெண் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அடரிகளத்தூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசி (வயது 40) என்பதும், அவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதும், 2 மகன்களும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது தெரியவந்தது.
மேலும் அந்த பெண்ணுடன் அறை எடுத்து தங்கிய வாலிபர் உல்லாசமாக இருந்து விட்டு, அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்து விட்டு தப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பெண்ணை கொன்ற வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்