திருவக்கரை கோவிலில் வெள்ளம் புகுந்தது

வானூர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் திருவக்கரை கோவிலில் வெள்ளம் புகுந்தது.

Update: 2021-11-18 21:11 GMT
வானூர், நவ.19-
வானூர் பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் திருவக்கரை கோவிலில் வெள்ளம் புகுந்தது. ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
விடிய விடிய மழை
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்றும் இந்த மழை நீடித்தது. தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்தது. ஏரி வாய்க்கால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட  சிறுவை, அச்சரம்பட்டு, பாப்பான்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷா முரளி பார்வையிட்டு, நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.
ஏரிகள் நிரம்பின
திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவற்குளம், காந்திநகர், பட்டானூர் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதிகளில் வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், திருச்சிற்றம்பலம் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். 
வானூர்    ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர், பச்சைவாழியம்மன் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை ஊராட்சி மன்ற தலைவர்  சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அகற்றினர். தொடர் மழையால் ஒட்டை, நல்லாவூர் ஏரிகள் முழுமையாக நிரம்பியது. ஒட்டை கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி   பெருமாள் சந்தித்து ஆறுதல் கூறினார். நல்லாவூர் கிராமத்தில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
திருவக்கரை கோவிலில் வெள்ளம்
திருவக்கரை கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலினுள் மழைநீர் புகுந்தது. கருவறைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர். கோவிலில் தேங்கிய மழைநீரை வடியவைக்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
____

மேலும் செய்திகள்