விடுமுறை அறிவிப்பதில் மாவட்ட நிர்வாகம் காலதாத்தால் கொட்டும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிய மாணவிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பத்தில் மாவட்ட நிர்வாகம் காலதமதமாக செயல்படுவதால் மாணவர்கள் மழையில் நனைவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2021-11-18 17:29 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பத்தில் மாவட்ட நிர்வாகம் காலதமதமாக செயல்படுவதால் மாணவர்கள் மழையில் நனைவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொடர்மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. சில பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இரவு, பகல் என பலத்த மழை பெய்து வருவதால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதியில் எங்கு பார்த்தாலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை. 

தாமதமாக விடுமுறை அறிவிப்பு

நேற்று காலையில் மழை பெய்து கொண்டு இருந்தது. மாவட்ட நிர்வாகம் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை என காலை 7 மணிக்கு அறிவித்தது. இதனால் 6-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

காலை 9 மணி அளவில் மாவட்டம் முழுவதும் விடாமல் கனமழை கொட்டியது. இதனால் சில அரசு பள்ளிகளில் மழைநீர் புகுந்தது. மாணவ, மாணவிகள் கடும் குளிரில் நடுங்க ஆரம்பித்தனர். இந்தநிலையில் திடீரென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதியம் முதல் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்தது. 

இதனால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமலும், மாணவர்களை எப்படி வீட்டிற்கு அழைத்து வருவது என பெற்றோர்களும் மிகவும் கவலை அடைந்தனர். சில பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே தங்களது வீட்டிற்கு திரும்பினர்.
மாவட்ட நிர்வாகம் மெத்தனம்

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில் மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. மற்ற மாவட்டங்களில் முதல் நாளே விடுமுறை அறிவித்து விடுகின்றனர். ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்  அவ்வாறு அறிவிப்பதில்லை. காலை 7 மணிக்கு பிறகுதான் அறிவிக்கின்றனர். வெளியூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் என்ன செய்வார்கள்.

மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையான பதில் வருவதில்லை. இனிவரும் காலங்களில் மழை காலங்களில் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு முன்கூட்டியே தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-----

மேலும் செய்திகள்