பட்டிவீரன்பட்டி அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பலி
பட்டிவீரன்பட்டி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பலியாகினர்.
பட்டிவீரன்பட்டி:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 55). இவர், உத்தமபாளையம் மின்சார வாரியத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். அவருடைய மனைவி ஆரோக்கியமேரி (50).
இவர்கள் 2 பேரும் புதுக்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக உத்தமபாளையத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டையில் இருந்து உத்தமபாளையம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை, உத்தமபாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் (38) ஓட்டினார்.
லாரி மீது கார் மோதல்
வத்தலக்குண்டு புறவழிச்சாலையில், பட்டிவீரன்பட்டி குறுக்குச்சாலை சந்திப்பு அருகே உள்ள பாலத்தில் நேற்று முன்தினம் இரவு கார் வந்து கொண்டு இருந்தது.
அப்போது மராட்டியத்தில் இருந்து உளுந்தம்பருப்பு ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி டீசல் தீர்ந்ததால் நடுரோட்டில் நின்றதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த லாரியின் பின்புறம், ரோட்டில் நின்று கொண்டு இருப்பதற்கு அடையாளமாக எச்சரிக்கை விளக்கு போடாமல் இருந்தது.
இந்தநிலையில் காஜாமைதீன் ஓட்டிவந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
2 பேர் சாவு
இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது. காரில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்....காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீசார் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி காரில் இருந்த 3 பேரையும் மீட்டனர்.
இதில் காரை ஓட்டி வந்த உத்தமபாளையத்தை சேர்ந்த காஜாமைதீன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மரியதாஸ், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெண் படுகாயம்
ஆரோக்கியமேரி படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து விபத்தில் இறந்த காஜாமைதீன் உடல் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையிலும், மரியதாசின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.