வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு
கனமழை பெய்ததால் வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது.கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன.
வைகை அணை கடந்த வாரமே முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் உபரியாக திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்வரத்து குறித்து 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 627 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 69.36 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 668 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று பெய்த கனமழையால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அதில் வைகை ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரத்து 200 கனஅடி, பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 1,650 கனஅடி, 58-ம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி, மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திறக்கப்பட்ட தண்ணீர் 7 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து சென்றது. 5 ஆயிரம் கனஅடிக்கும் மேல் திறக்கப்பட்டதால், வைகை அணை முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதையடுத்து கரையோர மக்களுக்கு ஆற்றில் இறங்கக்கூடாது, குளிக்கக்கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை ஆற்றில் குளிக்க தடை
ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணை, மஞ்சளாறு மற்றும் மருதாநதி உள்ளிட்ட ஆறுகளில் இருந்து அணைப்பட்டியில் உள்ள வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி நிலக்கோட்டை அருகே உள்ள கூட்டாத்து அய்யம்பாளையம், குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள் நத்தம், லட்சுமிபுரம், அணைப்பட்டி உள்ளிட்ட வைகை ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பொதுமக்கள் குளிக்க கூடாது என்றும், வெள்ள அபாயம் இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இப்பகுதியில் நீண்ட நேரம் தங்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கும் பகுதிகளை முள்செடிகளை வெட்டி போட்டு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் அடைத்தனர்.