கன மழையால் வெள்ளம் சூழ்ந்தது
பொங்கலூர் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்தது.
பொங்கலூர்,
பொங்கலூர் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த 11 பேரை தீயணைப்பு துறையினர் படகு மூலம் மீட்டனர்.
கன மழை
பொங்கலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை 6 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பல்வேறு இடங்களில் வடிகால் வசதி இல்லாததால் மழை வெள்ளம் அப்படியே தேங்கி நின்றது. அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வயல்வெளிகள் மற்றும் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியது. பாலாஜி நகரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிவேல் மற்றும் அவினாசிபாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் திருப்பூரிலிருந்து தீயணைப்பு துறையினரும் வந்தனர். பின்னர் ரப்பர் படகுகள் மூலம் வீடுகளில் இருந்த 11 பேரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை வெள்ளத்தால் கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற வாகனங்கள் செல்லமுடியாமல் அப்படியே நின்றன. கனரக வாகனங்களை மட்டும் அனுமதித்த போலீசார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து நேற்று காலை மழைநீர் அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
பொக்லைன் எந்திரம் கொண்டு அடைப்புகளை அகற்றி நீர் செல்ல வழி வகை செய்தனர். இதனால் சற்று மழை நீர் வடிந்தது. இருந்தாலும் அந்த பகுதி முழுவதும் கடல் போல் காட்சி அளித்தது.
வாகனங்கள் பழுது
அதுபோல் பொங்கலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் மழைநீர் அப்படியே தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த பெரும்பாலான வாகனங்கள் பழுதாகி சாலையில் நின்றன. வாகனங்களில் வந்தவர்கள் கீழே இறங்கி அதனை தள்ளிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.
பொங்கலூர் ஊராட்சி தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்தார். மழை வெள்ளத்தால் சாலை ஓரங்களில் இருந்த கடைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் நனைந்து ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு விதைப்பண்ணைக்கு செல்லும் சாலையில் மின் கம்பம் ஒன்றும் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகள்
பொங்கலூர் கடை வீதியில் மழைநீர் வடியாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம் மழைநீர் செல்லும் வழிகளை அடைத்து வைத்தது தான் என்று கூறப்படுகிறது.
மழைநீர் செல்லும் வழிகளில் சிறிய அளவிலான குழாய்களை பதித்து கடைக்காரர்கள் மண் கொட்டி உள்ளதால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொங்கலூரில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொங்கலூர் பகுதியில் கடந்த காலங்களில் அதிகபட்சமாக 158 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆனால் அதையும் கடந்து நேற்று காலை 7 மணி நிலவரப்படி 170 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.