காய்கறிகளை பாலீஷ் செய்து விற்றால் கிலோவுக்கு ரூ.5 கூடுதலாக கிடைக்கும்
முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் காய்கறிகளை பாலீஷ் செய்து விற்றால் கிலோவுக்கு ரூ.5 கூடுதலா கிடைக்கும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி
முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் காய்கறிகளை பாலீஷ் செய்து விற்றால் கிலோவுக்கு ரூ.5 கூடுதலா கிடைக்கும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உழவர் உற்பத்தியாளர் குழு
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து தோட்டக்கலை துறையின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுவதோடு, இடைத்தரகர் இன்றி நல்ல விலைக்கு விற்க வழிவகை செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் தொழில் செய்பவர்கள் போல் லாபம் பெற அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. நீலகிரியில் 6 நிறுவனங்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
பதப்படுத்தும் நிலையங்கள்
காய்கறிகளை சந்தைப்படுத்துவது, மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது குறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. மேலும் அரசு திட்டங்களின் கீழ் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
இது தவிர நீலகிரியில் அணிக்கொரை, தாவணெ, ஓசஹட்டி, நியூ அல்லஞ்சி, சுள்ளிக்கூடு, கோத்தகிரி, அய்யன்கொல்லி, உப்பட்டி ஆகிய 8 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி ரோஜா பூங்கா அருகே 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு வசதி இருக்கிறது.
இவை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அய்யன்கொல்லி, உப்பட்டியில் உள்ள நிலையங்களில் வாழை, மிளகு, காபி போன்றவற்றை விவசாயிகள் சேமித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
கூடுதல் விலை
காய்கறிகளை சுத்திகரித்து விற்பனை செய்ய 5 நிலையங்களில் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அங்கு கேரட், பீட்ரூட் கழுவி சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் எந்திரத்தில் பாலிஷ் செய்து, முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்படும் கேரட், பீட்ரூட் நல்ல நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5 கூடுதலாக விலை கிடைக்கிறது.
மேலும் 2 நிலையங்களில் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்வதால் நல்ல விலை கிடைக்கிறது. பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தில் மானியம் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.