வீட்டின் மீது கார் கவிழ்ந்து விபத்து
கூடலூர்-ஊட்டி சாலையோரத்தில் வீட்டின் மீது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கூடலூர்,
கூடலூர்-ஊட்டி சாலையோரத்தில் வீட்டின் மீது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தடுப்பு சுவர் இல்லை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நடு மற்றும் மேல் கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கர்நாடகா மற்றும் கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் இயக்கப்படுகிறது.
இதற்கிடையில் நடு கூடலூர் பள்ளிவாசல் முன்பு அந்த சாலையோரத்தில் வளைவான இடத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது.
அங்குள்ள பள்ளத்தில் அருள்பிரகாஷ் என்பவரது வீடு இருக்கிறது. தடுப்பு சுவர் இல்லாததால் சாலையில் வரும் வாகனங்கள் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. இதுபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
கார் கவிழ்ந்தது
இதன் காரணமாக அங்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இரவில் ஒளிரும் வகையில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் கொண்ட சில தடுப்பு கற்கள் மட்டும் நடப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு ஒரு கார் சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருள்பிரகாஷ் வீட்டின் மீது பாய்ந்து கவிழ்ந்தது. இதில் வீடு சேதமடைந்தது.
மேலும் காரில் பயணம் செய்த 3 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து வீட்டின் மீது விழுந்து கிடந்த காரை மீட்கும் பணி நடைபெற்றது.இதுதொடர்பாக அருள்பிரகாஷ் கூடலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.