வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள புவனேஸ்வரி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த வாரம் அதிக அளவில் மழை பெய்தபோது அடையாற்றின் கரையை தாண்டி வெள்ளநீர் புவனேஸ்வரி நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வெளியேறியது.
இதனை சரிசெய்யும் விதமாக தற்போது இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ள பகுதியையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணியிடம் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ள தாழ்வான பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களை வைத்து துரிதமாக மழை நீரை வெறியேற்றும் படி கூறினார்.
முன்னேற்பாடு பணிகள்
குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பணிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கேட்டறிந்தார். மேலும் இன்று(வியாழக்கிழமை) கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறினார்.
உடன் குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சீனிவாசன், உள்பட பலர் இருந்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த ஒரு வாரமாக அனைத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கி்றது. மீண்டும் இன்று காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.