கன மழை முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கன மழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை
கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. இதனால் கடந்த 7-ந்தேதி ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாததால் உபரி நீர் திறப்பு 250 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.33 அடியாகவும்(மொத்த உயரம் 24 அடி), நீர்வரத்து 405 கன அடியாகவும், நீர் இருப்பு 2,934 மில்லியன் கன அடியாகவும்(மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி) உள்ளது. இதனால் காலையில் உபரி நீர் திறப்பு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
2 ஆயிரம் கன அடி
இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடப்பதால் கனமழை பெய்யும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ‘ரெட்அலர்ட்’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக மேலும் உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்து விட்டால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் சீராக வெளியேற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புழல் ஏரி
அதேபோல் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரியில் இருந்து கடந்த 7-ந் தேதி 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
தற்போது கன மழை எச்சரிக்கையால் நேற்று ஏரியில் இருந்து கூடுதலாக 1,500 கனஅடி திறக்கப்பட்டு, பின்னர் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,796 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாகவும் உள்ளது.