கார்த்திகை மாதம் பிறந்தது மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அய்யப்ப பக்தர்கள் விரதம்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பார்கள்.
அதன்படி நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அந்தந்த பகுதியில் உள்ள குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அன்னதானம்
தர்மபுரி நகரில் உள்ள எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவில், கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
தர்மபுரி அருகே தடங்கம் மேம்பாலம் அருகில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் பக்தர்கள் மாலை அணிவிக்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு 18 படி பூஜையும், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு பக்தராக வரிசையில் நின்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த பகுதியில் தொடர்ந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு அன்னதானம் வழங்கும் பணியும் நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.