சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
நித்திரவிளை அருகே சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண்ணுக்கு வயிற்றுவலி
நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய சகோதரிக்கு 17 வயது ஆகிறது.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம், சகோதரனை பார்ப்பதற்காக அவர் குமரி மாவட்டத்துக்கு வந்தார். பின்னர் அவருடன் ஒரே அறையில் தங்கி உள்ளார். கடந்த 2 மாதமாக அவர் அங்கேயே இருந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்றுவலி அதிகமாகி உள்ளது.
கர்ப்பம்
இதனால் கடந்த 15-ந் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சகோதரியை வாலிபர் அழைத்து சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்ததில் அந்த பெண் 2 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
பின்னர் டாக்டர், அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆகிறது என்பதை அறிந்ததும் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதனால் டாக்டர், குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சகோதரர் கைது
இதனை தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசார் விரைந்து சென்று கர்ப்பமான சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த வாலிபர், சகோதரர் என்றும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
அறையில் ஒன்றாக தங்கிய போது சகோதரர் கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், இதனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சகோதரியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் நாகாலாந்தில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.