நாய் அசுத்தம் செய்ததால் மரக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை
வீட்டின் முன்பு வளர்ப்பு நாய் அசுத்தம் செய்ததால் மரக்கட்டையால் தாக்கி வாலிபரை படுகொலை செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சித்ரதுர்கா: வீட்டின் முன்பு வளர்ப்பு நாய் அசுத்தம் செய்ததால் மரக்கட்டையால் தாக்கி வாலிபரை படுகொலை செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வளர்ப்பு நாய்
சித்ரதுர்கா மாவட்டம் ஜாலிகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மகாந்தேஷ் (வயது 23). இவர் தனது வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுவாமி. இவரது மனைவி கமலம்மா.
இந்த நிலையில் மகாந்தேசின் வளர்ப்பு நாய் அடிக்கடி சுவாமியின் வீட்டு அருகில் சென்று சிறுநீர் கழிப்பதுடன், இயற்கை உபாதை கழித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுவாமி, மகாந்தேசிடம் கூறி, எனது வீட்டு அருகில் நாய் அசுத்தம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். இருப்பினும் அந்த வளர்ப்பு நாய், சுவாமி வீட்டு முன்பு அசுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
கொலை
அதுபோல் நேற்று முன்தினம் இரவும் வளர்ப்பு நாய் சுவாமி வீட்டு முன்பு அசுத்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக சுவாமிக்கும், மகாந்தேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுவாமி, மரக்கட்டையால் மகாந்தேசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்கு சுவாமியின் மனைவி கமலம்மாவும் உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த மகாந்தேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
பின்னர் தம்பதி தங்களது வீட்டை பூட்டிவிட்டு இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டனர்.
தம்பதிக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் பற்றி மகாந்தேசின் குடும்பத்தினர், சித்ரதுர்கா புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வளர்ப்பு நாய் வீட்டு முன்பு அசுத்தம் செய்ததால் மகாந்தேசை, சுவாமியும், அவரது மனைவியும் சேர்ந்து தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கொலையான மகாந்தேசின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.