சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்,
சிறுமி பலாத்காரம்
அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 20). இவர் ஆசை வார்த்தை கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் செல்போனில் சிறுமியின் புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செல்வகணபதியிடம் கேட்டதற்கு, அவர் சிறுமியின் செல்போன் படங்களை வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைப்பு
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்தவர் விஜயன் (35). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதற்காக சென்ற போது, அங்கு ஒரு சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுத்து வந்த சிறுமியை விஜயன் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, விஜயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று செல்வகணபதி, விஜயன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த செல்வகணபதி, விஜயனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் வழங்கினர்.