குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-17 18:23 GMT
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12-வது வார்டு மேலத்தெரு பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 12-வது வார்டு மக்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள் குடிநீர் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதையடுத்து அப்பகுதி மக்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அழைத்துக் கொண்டு 12-வது வார்டு பகுதிக்கு சென்ற அதிகாரிகள், குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் தர்ணா போராட்டத்தால் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்