காரை மோதவிட்டு வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் காரை மோத விட்டு வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-17 18:12 GMT
உத்தமபாளையம்: 


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
தேனி மாவட்டம் கூடலூைர சேர்ந்தவர் மதன் (வயது 36).வக்கீல். இவரது மனைவி லிடியா (28). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று உத்தமபாளையம் கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் மதன் சென்றார். பின்னர் மதியம் சுமார் 12.30 மணி அளவில் மதனும் கோம்பையை சேர்ந்த ஆண்டவர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.  மோட்டார் சைக்கிளை மதன் ஓட்டினார். உத்தமபாளையம்-கம்பம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

சரமாரி வெட்டிக்கொலை
இதில் மதன், ஆண்டவர் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது காரில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இறங்கியது. இதை பார்த்த ஆண்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
கண்ணிமைக்கும் நேரத்தில் மதனை அந்த கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மதன் உயிருக்கு போராடினார். பட்டப்பகலில் சினிமாவை போல் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். 

இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் கிடந்த மதனை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

உறவினர்கள் வாக்குவாதம் 
தகவலறிந்த மதனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருந்து மதனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அப்போது ஆம்புலன்சை உறவினர்கள் மறித்தனர். மதனின் உடலை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையிலேயே மதனின் உடல் பிரேத பரிசோதனை ெசய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து மதனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

4 பேர் கைது 
இதற்கிடையே மதனை கொலை செய்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி சென்ற கும்பலை உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கருணாநிதி (65), அவரது மகன்கள் செல்வேந்திரன் (45), சுதேசி (40) மற்றும் உறவினர் அரசகுமார் (36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்