கோவை
கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டல் அருகே கடந்த 6-ந் தேதி இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் குடிபோதையில் படுத்து கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் அசைவின்றி கிடந்ததால் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பரிசோதித்த போது அந்த நபர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், இறந்துகிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குடிபோதையில் இறந்து கிடந்தவரின் பெயர் சேது என்பதும், அவர் அங்குள்ள ஓட்டலில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலை பார்த்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரின் இடது மார்பில் ராஜீ என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.