வடியாத மழை நீரால் தத்தளிக்கும் கிராம மக்கள்
கடந்த சில நாட்களாக மழை நின்றாலும் கூட வீடுகளை சுற்றி தேங்கிய மழைவெள்ளம் வடியாததால் இரவு, பகலாக காரைக்குடி அருகே கிராம மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
கல்லல்,
கடந்த சில நாட்களாக மழை நின்றாலும் கூட வீடுகளை சுற்றி தேங்கிய மழைவெள்ளம் வடியாததால் இரவு, பகலாக காரைக்குடி அருகே கிராம மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
வெள்ளம்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் குறைவான அளவு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கல்லல் அருகே தேவபட்டு மற்றும் சின்ன தேவபட்டு கிராமத்தில் உள்ள தாழ்வான இடங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளைச் சுற்றி மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த வெள்ளத்தை தாண்டி செல்லும் நிலையில் பல்வேறு சிரமங்களை அடைந்து வருவதாக தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் அந்த கிராமத்தை சூழ்ந்ததால் அங்குள்ள பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல முடியாமல் தண்ணீரில் மிதந்து செல்லும் நிலையில் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையில் கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அங்கு சென்று அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுவழி
மேலும் கண்மாய் கழுங்கு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரை மாற்று வழியில் திருப்புவதற்கான பணியும் மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வரும் நாங்கள் இதுபோன்ற வெள்ளத்தை தற்போது தான் பார்க்கிறோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.