ராமநாதபுரத்தில் தங்கம் ஆனது தக்காளி விலை
தொடர்மழை எதிரொலியாக ராமநாதபுரத்தில் தங்கம் ஆனது தக்காளி விலை. கிடுகிடுவென உயர்ந்து 3 மடங்கு விலை வைத்து ரூ.120-க்கு விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்,
தொடர்மழை எதிரொலியாக ராமநாதபுரத்தில் தங்கம் ஆனது தக்காளி விலை. கிடுகிடுவென உயர்ந்து 3 மடங்கு விலை வைத்து ரூ.120-க்கு விற்கப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உரிய விலை
காய்கறிகளை பொறுத்தமட்டில் வெங்காயமும், தக்காளியும் தான் இல்லத்தரசிகளை ஆண்டுதோறும் விலை ஏற்றத்தில் பாடாய்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ ரூ.20 என்று விற்று வந்தது. இதன்காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி வியாபாரிகள் தக்காளிகளை ரோட்டோரங்களில் வீசிவிட்டு சென்றனர்.
கடைகளில் மற்ற காய்கறிகள் வாங்கினால் தக்காளி இனாம் என்ற அறிவிக்கும் அளவிற்கு விலையின்றி போனது. இந்த நிலை சிலநாட்களே நீடித்தது. தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. தங்கத்தின் விலையை போன்று பார்க்க மட்டுமே தக்காளி என்ற உச்சநிலையை அடைந்துவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி சமயத்தில் கூட ஒருகிலோ தக்காளி ரூ.40 என்று விற்பனையாகி வந்தது. இதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது நேற்று ஒருகிலோ தக்காளி ரூ.120 என்று விற்பனையானது. ஒரேவாரத்தில் 3 மடங்கு விலை உயர்ந்து விட்டது. ரூ.60 என்று உயரத்தொடங்கிய விலை தற்போது ரூ.120 என விற்பனையாவதால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தக்காளியை தங்கம்போல வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
செடி அழுகல்
இதுகுறித்து ராமநாதபுரம் தக்காளி மொத்த வியாபாரி மணிகண்டனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தக்காளி பொதுவாக கோவை நாச்சியம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்துதான் கொள்முதல் செய்வதுவழக்கம். ஆனால், தற்போது தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் அனைத்தும் அழுகி விழுந்து விட்டன. இதன்காரணமாக விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. இனி புதிதாக செடி நடவு செய்து தக்காளி காய்த்து வந்தால்தான் விற்பனைக்கு வரும்.
இதன்காரணமாக வேறு வழியின்றி ஆந்திராவில் சிந்தாமணி என்ற பகுதியில் இருந்து தக்காளி வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். ஒரே இடத்தில் அதிகமானோர் கொள் முதல் செய்வதால் அதிக தேவை காரணமாக விலை ஏறிவிட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒரு பெட்டி தக்காளி ரூ.400 என்று விற்பனை செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.1,250 என்று விற்பனையானது. இதன்காரணமாக நாங்கள் ஒரு கிலோ ரூ.120 வரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நேற்று இன்னும் அதிகமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.1500 என்று விற்பனையாகி உள்ளது.
இதனால் நாங்கள் வேறு வழியின்றி தக்காளியை ஒருகிலோ ரூ.150 வரை விலை வைத்துதான் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐயப்பன் கோவில் விரதம் காரணமாக விலை ஏற்றம் என்பது கிடையாது. மழை காரணமாக தக்காளி செடி அழிந்து விட்டதால் தான் இந்த விலை ஏற்றம். இந்த விலை மீண்டும் குறைய ஒரு மாதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறி விலை உயர்வு
தக்காளி விலையை போன்றே பல காய்கறிகளும் விலை ஏறிவிட்டது. கத்தரிக்காய் ரூ.60 வரை விற்றது தற்போது ரூ.120 என்றும், வெண்டைக்காய் ரூ.40 விற்றது ரூ.85-க்கும், ேகரட் ரூ.40-க்கு விற்றது ரூ.80-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கு விற்றது ரூ.110-க்கும், முட்டைக்கோஸ் ரூ.20 -க்குவிற்றது ரூ.40 என்றும், சவ்சவ் காய் ரூ.15-க்கு விற்றது ரூ.30 என்றும், பாகற்காய் ரூ.30-க்கு விற்றது ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து காய்கறிகளும் இருமடங்கு விலை உயர்ந்துவிட்ட நிலையில் தக்காளி 3 மடங்கு உயர்ந்துள்ளது. இன்னும் 5 மடங்கு விலை உயர்ந்து தங்கம்போல் தக்காளி மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.