திண்டுக்கல்லில் கருப்பு சட்டை அணிந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த கோவை மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-17 17:13 GMT
திண்டுக்கல்:
பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த கோவை மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்தார். அந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வு நடத்துவதை கைவிட்டு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல்லில் நேற்று தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.
அதில் பெரும்பாலான மாணவர்கள் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து வந்து இருந்தனர். இதையடுத்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக, அங்கிருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே மாணவர்கள் சென்ற போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் பேச்சுவார்த்தை 
மேலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்வதை கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலமாக செல்வதை கைவிட்டு பஸ்களில் ஏறி சென்றனர். ஆனால் கல்லூரி மாணவர்கள் நேராக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு 
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கோவை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அதேபோல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு இருப்பதால் நேரடி தேர்வு நடத்தினால் மதிப்பெண் குறையும். எனவே ஆன்லைனிலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்