சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
பொள்ளாச்சி
கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சியில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.
மாலை அணிந்தனர்
கார்த்திகை மாதம் பிறந்ததும், பக்தர்கள் மாலை அணிந்து, விர தம் இருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பார்கள். இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள் ளாச்சி பகுதியில் பக்தர்கள் பலர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தனர்.
இதையொட்டி பொள்ளாச்சி வெங்டேசா காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு அய்யப்பனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகள்
அதை தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலர் இந்த கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குருசாமி மூலம் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டனர். அதிகாலை முதலே ஏராளமானோர் இங்கு வந்து சாமிதரிசனம் செய்து மாலை அணிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் விரதத்தை கடைபிடிக்க தொடங்கினார் கள். இதன் காரணமாக கோவில் முன்பு உள்ள கடைகளில் வேட்டிகள் மற்றும் மாலைகளின் விற்பனை மும்முரமாக இருந்தது.