கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது 38 பவுன் நகைகள் மீட்பு

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 38 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2021-11-17 17:05 GMT
சின்னசேலம், 

தொடர் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய சரகங்களுக்குட்பட்ட கிராமங்களில் மர்மநபர்கள் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனர். மேலும் தனியாக வீடுகளில் இருக்கும் பெண்களை தாக்கி நகைகளை பறித்துச் சென்றனர். இதையடுத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடித்து கைது செய்யுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், திருட்டு நடைபெற்ற வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளையும், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளையும் ஒப்பிட்டு பார்த்து, விசாரணை மேற்கொண்டனா். 

விசாரணை

அப்போது ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடையவரான கொங்கராப்பாளையத்தில் வசித்து வரும் தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன்கள் தர்மராஜ் (வயது 35), சக்திவேல் (31) மற்றும் சின்னசேலம் அசேபாநகரில் தற்போது வசித்துவரும் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டை சேர்ந்த பாபு மகன் பிரகாஷ் (25) ஆகிய 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை் சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து நேற்று முன்தினம் போலீசார் விசாரணை நடத்தினர். 

3 பேர் கைது

அப்போது சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் ஆகிய 3 போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட 13 வழக்குளில் சேகரித்த கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்தபோது, தர்மராஜ், சக்திவேல், பிரகாஷ் ஆகிய 3 பேரின் கைரேகைகள் ஒத்து போனது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார்,  அவர்கள் 3 பேரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தியபோது, 3 பேரும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கூறிய தகவல்படி சின்னசேலம், கள்ளக்குறிச்சி நகை கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 38 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

மேலும் செய்திகள்