கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கரூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Update: 2021-11-17 17:02 GMT
கரூர்
கார்த்திகை மாதம்
சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் அதிகாலை முதலே அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 
அந்தவகையில் நேற்று கரூரில் உள்ள கரூர் பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை சுமார் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் அய்யப்பனுக்கு பால், நெய், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
மாலை அணிவித்து...
தொடர்ந்து அய்யப்பபக்தர் களுக்கு, குருசாமி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தியுடன் கார்த்திகை விரதத்தை சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு அய்யப்பபக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.        பசுபதீஸ்வரர் அய்யப்பன் கோவிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் பசுபதீஸ்வரா அய்யப்பா சேவா சங்கம் செய்திருந்தது.
தோகைமலை 
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள அய்யப்ப பக்தர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி தங்கள் ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் ஆற்றங்கரையில் உள்ள கோவில்களிலும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

மேலும் செய்திகள்