தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2021-11-17 14:19 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பசுமை போர்வை இயக்கம்
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் (16-ந்தேதி) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறை நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்பில் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஏக்கருக்கு 50 கன்றுகள்
விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். மேலும் 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும்.
சந்தன மரக்கன்று
இந்த மரக்கன்றுகள் வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கை, சந்தனம், மஞ்சள், கடம்பு, ஈட்டி, மலை வேம்பு, மகோகனி, மருது மற்றும் பூவரசு போன்ற மரக்கன்றுகள், மருத்துவத்துக்கு பயன்படும் வேம்பு, புங்கன், புளி, மருது, தான்றிக்காய், பெருநெல்லி மற்றும் வில்வம் போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி அருகில் உள்ள வனத்துறை நாற்றங்காலில் மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்