பழுதடைந்த செவிலியர் குடியிருப்பை சீரமைக்க வேண்டும்

எருமாடு அருகே பழுதடைந்த செவிலியர் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-11-17 13:40 GMT
பந்தலூர்

எருமாடு அருகே பழுதடைந்த செவிலியர் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கப்பாலா மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் அருகில் உள்ள சுகாதாரத்துறைக்கு சொந்தமான குடியிருப்புகளில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். ஆனால் அந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. மேலும் முறையாக பராமரிப்பு பணி நடைபெறவில்லை.

சுவர்களில் விரிசல்

இதன் காரணமாக அந்த குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. அங்குள்ள சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் சில நேரங்களில் செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காயம் அடையும் நிலை காணப்படுகிறது.

தற்போது பந்தலூர் தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சேதம் அடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் குடியிருப்புக்குள் கசிகிறது. இதனால் சிலர் மேற்கூரையில் பிளாஸ்டிக் பைகளை போட்டு வைத்து உள்ளனர்.

புதிய குடியிருப்புகள்?

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு குடியிருப்பு வசதி போதுமானதாக இல்லை. மிகவும் பழுதடைந்த கட்டிடங்களில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மரத்தால் ஆன கதவு, ஜன்னல்கள் கரையான்களால் அரிக்கப்பட்டு உடைந்து கிடக்கிறது. மேலும் கட்டிடங்களை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. 

சுவர்களில் உள்ள துளைகளில் பாம்புகள் பதுங்கி இருக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. இதனால் செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே அந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். இ்லலையென்றால் புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்