வியாபாரியை கடத்திச்சென்று நகை பறிப்பு

தளி அருகே கார் வாங்குவது போல் நடித்து வியாபாரியை காரில் கடத்தி சென்று நகை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-17 12:57 GMT
தளி,நவ.18-
தளி அருகே கார் வாங்குவது போல் நடித்து வியாபாரியை காரில் கடத்தி சென்று நகை பறித்த  4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மளிகை கடைக்காரர்
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). மளிகை கடை நடத்தி வருகிறார். அத்துடன் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராபின்ராஜ் 24 என்பவர் சேகரை செல்போனில் தொடர்பு கொண்டு விலைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஒரு கார் விற்பனைக்கு தயாராக உள்ளது. நேரில் வந்து பார்த்துவிட்டு விலைபேசி எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் மாமரத்துப்பட்டிக்கு  ராபின்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அருள்ராஜ் 28, சேவாக்20 மரியாஅபின் 29 ஆகியோர் வந்தனர். அவர்கள்  4 பேரும் காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்வதாக சேகரிடம் தெரிவித்து உள்ளனர். சேகருக்கு கார் வாங்க வந்த ராபின்ராஜ் ஏற்கனேவே தெரியும் என்பதால் அதற்கு சரி என்று ஒத்துக்கொண்டார். 
கடத்தல்
இதையடுத்து 4 பேரும், சேகரை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையான தேவனூர்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அந்தியூர்- செல்லப்பம்பாளையம் சாலையில் சென்றனர். அப்போது திடீரென காரை நிறுத்திய கும்பல் சேகரை மிரட்டிய அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தனர். பின்னர் அவரை கீழே இறக்கி விட்டு,  காரை கடத்திக்கொண்டு சென்று விட்டனர். அப்போதுதான் அந்த கும்பல் கார் வாங்க வரவில்லை என்றும், கொள்ளையில் ஈடுபடும் கார் கடத்தல் கும்பல் என்றும் அவருக்கு தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், உடனே தனது செல்போன் மூலம் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட  போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரித்தனர்.  மேலும் கோவை, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டது.  
4 பேர் கைது
அதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர்கள் ராஜாகண்ணன் (தளி), சிவக்குமார் (குடிமங்கலம்) பாலமுருகன் (மடத்துக்குளம்) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அந்த தனிப்படை போலீசாரும் கார் கடத்தல் கும்பலை தேடி வந்தனர். 
இந்த நிலையில் காருடன்  தப்பிச்சென்ற 4 பேரும் பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்தனர். பின்னர் அவர்கள்  4 பேரும் தளி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபின்ராஜ், அருள்ராஜ், சேவாக்,  மரியாஅபின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தளி போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



மேலும் செய்திகள்