விளாத்திகுளம் அருகே காரில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ 50 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள், 14 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன

விளாத்திகுளம் அருகே காரில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ 50 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள், 14 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2021-11-17 11:30 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே காரில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள், 14 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆடுகள் திருட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஆடு திருடும் கும்பலை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன், சூரங்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன சோதனை
இந்தநிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் சோதனை சாவடி பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர்.
விசாரணையில், காரில் இருந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் காரில் ஆடுகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 55), காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (52) என்பதும், ஆடுகளை திருடி காரில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
2 பேர் கைது
பின்னர் அவர்கள் இருவரையும் உடனடியாக  கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது நாசர் என்பவரின் மகன்களான முகம்மது அராபத் மற்றும் ஆசிக் ஆகிய இருவரும் காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகின்றனர். முகம்மது அராபத் மற்றும் அவரது கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரும், அதேபோன்று ஆசிக் மற்றும் கூட்டாளிகள் செல்வராஜ், ஆறுமுகம், ஆசிக்ராஜா ஆகியோரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களில் ஆடுகளை கடத்தி வந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்த கும்பல் 20 இடங்களில் ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
3 கார்கள் பறிமுதல்
மேலும் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர். தனிப்படை போலீசார் மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான செல்வராஜ், ஆறுமுகம் ஆகிய இருவரிடம் இருந்து 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்