அடையாறு ஆற்றில் குளித்த போது பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி
அடையாறு ஆற்றில் குளித்த போது 10-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். மாயமான மற்றொரு சிறுவனை தீயணைப்பு துறையினர் தேடுகின்றனர்.
சென்னை,
சென்னை அரசு பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 10). அதே பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரின் மகன் ஹரிஷ் (15). இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில், 10 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை குளிப்பதற்காக சந்தோஷ்குமாரும், ஹரிசும் சைதாப்பேட்டை அடையாறு ஆற்றுக்கு வந்தனர்.
அங்கு ஆற்றில் இறங்கி இருவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், இருவரும் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, ஆற்றில் மூழ்கியதில் இருவரும் உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிண்டி, சைதாப்பேட்டையில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மாயமான இருவரையும் தேடினர். அப்போது, சந்தோஷ்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் ஹரிஷை, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.