கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலி பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து
கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட கடந்த 23.9.2020-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்க்காணல் நடத்தப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக இதுவரையில் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் உள்ளது. எனவே கடந்த 23.9.2020-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும். எனவே மேற்கண்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பத்தாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது. மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிபணியிடங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.