பச்சை தேயிலை கொள்முதல் அதிகரிப்பு
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் அதிகரித்து உள்ளதாக இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ கூறினார்
ஊட்டி
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை கொள்முதல் அதிகரித்து உள்ளதாக இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ கூறினார்.
அதிகளவில் கொள்முதல்
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து, அதற்கான விலையை பெற்று வருகிறார்கள்.
இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பச்சை தேயிலைகக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் அக்டோபர் மாதம் பச்சை தேயிலை அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
விலை நிர்ணயம்
இதுகுறித்து இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ கூறியதாவது:-
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிற்சாலைகள் மூலம் கடந்த மாதம் 55 லட்சத்து 80 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திற்கு தேயிலை வாரியம் பச்சை தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.14.74 நிர்ணயித்தது. கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கான மாத விலையை நிர்ணயிக்க அனைத்து தொழிற்சாலைகளின் நிர்வாக குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிதி நிலைமையை ஆராய்ந்து பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதத்திற்கு பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மகசூல் அதிகரிப்பு
மஞ்சூர், கைகாட்டி ஆகிய 2 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களுக்கு கிலோவுக்கு ரூ.15 வழங்கப்படும். கடந்த சில மாதங்களாக தேயிலைத்தொழில் வியாபாரத்தில் கடும் விலை சரிவு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் பச்சை தேயிலை வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால் தேயிலைத்தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. மேலும் பசுமையாக காட்சி அளிக்கின்றன.