சாலையில் ஜீப் கவிழ்ந்து விபத்து
ஊட்டி அருகே சாலையில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டி அருகே சாலையில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
காளான் கழிவுகள்
ஊட்டி அருகே உள்ள முட்டிநாடு பகுதியில் விவசாயி அருணாச்சலம் என்பவரது தோட்டத்துக்கு விவசாய பணிக்காக தொழிலாளர்கள் நேற்று காலை ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.
இதற்கிடையில் அங்கு செல்லும் வழியில் செலவிப் நகரில் உள்ள மண்சாலையில் மற்றொரு விவசாயி காளான் கழிவு மூட்டைகளை கொட்டி வைத்து இருந்தார். மேலும் அதனை வாகனத்தில் ஏற்றுவதற்காக சிறிய பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் உள்ள மண்ணை கொஞ்சம் அகற்றி தயாராக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடம் சேறும், சகதியுமாக இருந்தது.
ஜீப் கவிழ்ந்தது
அப்போது அந்த வழியாக தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த தொழிலாளர்கள் சாந்தி (வயது 55), முத்துலட்சுமி (35), புஷ்பராணி (50), சரஸ்வதி (44), யசோதா (40), கவிதா (40), லதா (54) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினர்.
சப்-கலெக்டர் ஆய்வு
இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உரிய அனுமதி பெற்று மட்டுமே பொக்லைன் எந்திரம் பயன்படுத்த வேண்டும். ஆனால் அனுமதியின்றி பயன்படுத்தி காளான் கழிவுகளை ஏற்றுவதற்கு வாகனம் வந்து செல்வதற்காக சாலையில் மண் அகற்றப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் காளான் கழிவுகள் போன்றவற்றை கொட்டி வைக்கக்கூடாது. வாகனங்கள் செல்ல வழி விட வேண்டும் என்று அறிவுறுத்தினார். விவசாய பணிக்கு தொழிலாளர்களை அழைத்து சென்ற ஜீப் கவிழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.