ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2021-11-16 12:36 GMT
கொலை செய்யப்பட்டாரா? என கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெண்ணுடன் கள்ளக்காதல்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). இவர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். ரஞ்சித்குமாருக்கும் கணவனை பிரிந்து வழ்ந்து வந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் ரஞ்சித்குமார் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர் பக்தவச்சலம் நகர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே அந்த பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித்குமார் குடித்துவிட்டு கள்ளக்காதலியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி வெளியில் சென்ற ரஞ்சித்குமார் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தனர்.

கொலையா? விசாரணை

போலீசார் ரஞ்சித்குமாரை தேடி வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலி உள்பட அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்