மீண்டும் மழை வந்தால் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் மீண்டும் மழை வந்தாலும் அதை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையை அடுத்த புழுதிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் நிகழ்ச்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு இல்லம் தேடி மருத்துவம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளில் மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. 5 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னையில் 570 இடங்களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. 15 மண்டலங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் அமைத்து மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சென்னையில் மீண்டும் மழை வந்தாலும் அதை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர்கள் பெருங்குடி ரவிசந்திரன், ஜெ.கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.