வேலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு

வேலூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-16 03:55 GMT
வேலூர்

வேலூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய நகராட்சிகளில் 57 வார்டுகள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சிகளில் 63 வார்டுகள் என்று மொத்தம் 180 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

 இதையொட்டி வார்டு வாரியாக 646 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. 
அதைத்தொடர்ந்து இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டன. வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 1,707 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,273 கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 646 வாக்குச்சாவடிகளில் 1,154 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 1,839 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

மாதிரி வாக்குப்பதிவு

அவை பெங்களூருவை சேர்ந்த பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் கடந்த 8-ந் தேதி முதல் முதல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆயிரம் வாக்குகளை பதிவு செய்யும் மாதிரி வாக்குப்பதிவு வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன், வேலூர் மாநகராட்சி அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், பெல் நிறுவன பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்